தமிழ் வளர்ச்சி நிறுவன கிளையை வெளிநாடுகளிலும் தொடங்க வேண்டும்:செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக்க கெடு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக்க மத்திய-மாநில அரசுகளுக்கு கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக்க மத்திய-மாநில அரசுகளுக்கு கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
செம்மொழி தமிழ்
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் 6 மொழிகள் செம்மொழியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் மிகப்பழமையான மொழியாக தமிழ் உள்ளது. ஆனால் கடந்த 3 வருடங்களாக தமிழ்மொழி வளர்ச்சிக்கு என ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
14 ஆயிரம் பேர் மட்டும் பயன்படுத்தும் சமஸ்கிருத மொழிக்கு கடந்த 3 வருடங்களில் ரூ.644 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியை கற்றுக்கொடுக்க நாடு முழுவதும் 27 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது ஏற்புடையதல்ல.
ஆயிரம் கோடி ரூபாய்
எனவே செம்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், நாடு முழுவதும் செம்மொழியான தமிழை கொண்டு செல்வதற்கு கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். இதுசம்பந்தமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்ப்பதில் மத்திய அரசுக்கு ஆர்வம் உள்ளது. தமிழ் வளர்ச்சி நிறுவனத்தின் கிளையை தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகம்
அதேபோல தமிழ்மொழி வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்கள் இதுவரை வகுக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவின் கலாசாரம் மற்றும் வரலாற்றை தமிழ்மொழி ஆழமாக எதிரொலிக்கிறது. கலை, இலக்கியத்துறையில் தமிழ்மொழி பெரும் பங்காற்றியுள்ளது. எனவே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் 16 வாரத்தில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.