வாடகை கட்டிடத்தில் இயங்கும் கிளை நூலகம்
கீழ்வேளூரில் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கல்:
கீழ்வேளூரில் தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளை நூலகம்
கீழ்வேளூரில் கடந்த 1957-ம் ஆண்டு கிளை நூலகம் தனியார் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதையடுத்து 1976-ம் ஆண்டு முதல் சின்னகடை தெருவில் தனியார் வாடகை கட்டிடத்தில் மாடியில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 26 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மேலும் 4 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாகவும் உள்ளனர். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியாக உள்ளது. மேலும் தாலுகாவின் தலைமையிடமாகவும் கீழ்வேளூர் உள்ளது.
இங்கு பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் மற்றும் வேளாண்மை கல்லூரி, அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கீழ்வேளூருக்கு மற்ற பகுதிகளில் இருந்து பொதுமக்களும் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகளும் இங்கு வந்து படித்து செல்கின்றனர்.
வாடகை கட்டிடத்தில்..
தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த நூலகத்திற்கு மாத வாடகையாக ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகம் மாடியில் இயங்கி வருவதால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேலே ஏறிச்சென்று புத்தகங்களை படிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பொது நூலகத்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்குத்தான படிக்கட்டுகள்
கீழ்வேளூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சமூகஆர்வலர் கணேசன் கூறுகையில், நான் நூலகத்திற்கு சென்று படித்து வந்து கொண்டிருந்தேன். கிளை நூலகம் வாடகை கட்டிடத்தில் மாடியில் இயங்கி வருகிறது. மேலும் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதால் என்னால் அதில் ஏற முடியவில்லை.
மேலும் என்னைப்போல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் படிக்கட்டில் ஏற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்த கட்டிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசுக்கு சொந்தமான இடத்தில்..
கடம்பங்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் அருண்:-
நான் அரசு கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து வருகிறேன். கல்லூரி முடிந்தவுடனும் மற்றும் விடுமுறை நாட்களிலும் நூலகத்திற்கு சென்று எதிர்காலத்திற்கு தேவையானவற்றை படித்துக்கொண்டு வருகிறேன். சரியான வசதிகள் இல்லாமல் இந்த கட்டிடம் உள்ளது. தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த நூலகத்திற்கு கீழ்வேளூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய நூலகம் அமைத்து கொடுத்தால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக இருக்கும். இதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.