கோவையில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் சேலத்தில் பெண்ணுக்கு பொருத்தம்
கோவையில் நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
சேலம்
மூளைச்சாவு
கோவையை சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் அந்த நபரின் சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவற்றை அகற்றினர். அதில், கல்லீரல் மற்றும் இதயம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.
சிறுநீரகம் பொருத்தம்
அதேபோல், மூளைச்சாவு அடைந்த அந்த நபரின் சிறுநீரகம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இதற்காக கோவையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலத்துக்கு எடுத்து வரப்பட்டது. அப்போது, அந்த வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் இரவு 8.21 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் இரவு 10.52 மணிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தது.
இதனை தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரி சிறுநீரக அறுவை சிகிச்சை டாக்டர் பெரியசாமி, மயக்கவியல் நிபுணர் டாக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு பெண் நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் அந்த சிறுநீரகத்தை பொருத்தினர். கோவையில் இருந்து சேலத்துக்கு அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் ஆம்புலன்சை ஓட்டி வந்த டிரைவரையும், மருத்துவ உதவியாளரையும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.