சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-01-31 13:23 GMT

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பாலியல் சில்மிஷம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வழுதலகுணம் புதுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியிடம் பிஸ்கெட் கொடுத்து ஏமாற்றி, சிறுமி வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று உள்ளார்.

பின்னர் அவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இதை கண்ட சிறுமியின் தந்தை, மணிகண்டனை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அவர் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்