கோழிப்பண்ணையில் வேலை பார்த்த வட மாநில சிறுவன் சாவு
கரூர் அருகே கோழிப் பண்ணையில் வேலை பார்த்த வட மாநில சிறுவன் திடீரென இறந்தார்.;
சிறுவன் சாவு
பீகார் மாநிலம் புரவிசம்பாரம் அருகே பக்கிரிதேயில் பகுதியை சேர்ந்தவர் சிக்கிந்தர். இவரது மகன் நிராஜ்குமார் (வயது 14). இவர் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோழிப்பண்ணையில் உள்ள தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் இரவு தங்கி இருந்த இடத்தில் நிராஜ்குமார் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் நிராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிராஜ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிேசாதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நிராஜ்குமாரின் தந்தை சிக்கிந்தர் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிந்து, நிராஜ்குமாரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். சிக்கிந்தர் தனது மனைவி ரீத்தாதேவி, 2 மகன்கள், 2 மகள்களுடன் நாமக்கல் மாவட்டம் அனகோண்டாபாளையத்தில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.