கோத்தகிரி அருகே, நள்ளிரவில்வீட்டுக்குள் புகுந்த கருஞ்சிறுத்தையால் பரபரப்பு

கோத்தகிரி அருகே, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2023-10-10 19:30 GMT

கோத்தகிரி: கோத்தகிரி அருகே, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வீட்டிற்குள் புகுந்த கருஞ்சிறுத்தை

கோத்தகிரி அருகே பெரியார் நகர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வனப்பகுதியையொட்டி உள்ளதால் பெரியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் கரடி, காட்டெருமை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் வனவிலங்குகள் பீதியிலேயே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் வனப்பகுதியில் இருந்து கருஞ்சிறுத்தை ஒன்று இரைதேடி பெரியார் நகருக்குள் புகுந்துள்ளது. பின்னர் கருஞ்சிறுத்தை, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்துள்ளது.

வளர்ப்பு நாயை வேட்டையாட முயற்சி

தொடர்ந்து வீட்டின் வளாகத்தில் கூண்டுக்குள் இருந்த வளர்ப்பு நாயை கண்டதும் அதனை கருஞ்சிறுத்தை வேட்டையாட முயன்றது. ஆனால் கூண்டுக்குள் வளர்ப்பு நாய் இருந்ததால் அதனால் வேட்டையாட முடியவில்லை. இதற்கிடையே கருஞ்சிறுத்தையை கண்டு வளர்ப்பு நாய் எதிர்த்து குரைத்தது. இதையடுத்து சிறிதுநேரம் கழித்து வீட்டில் இருந்து கருஞ்சிறுத்தை வெளியே சென்று மறைந்துவிட்டது.

இந்த காட்சிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வனப்பகுதியில் இருந்து வந்து வீட்டிற்குள் கருஞ்சிறுத்தை புகுந்ததால் சம்பந்தப்பட்ட வீட்டின் குடும்பத்தினர் மட்டும் இன்றி அப்பகுதி மக்களே பீதியில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் கருஞ்சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்