கால்வாயில் துணி துவைத்த பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு
பூதப்பாண்டி அருகே கால்வாயில்துணி துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே கால்வாயில்துணி துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
5½ பவுன் சங்கிலி பறிப்பு
பூதப்பாண்டி அருகே உள்ள நடுமார்த்தால் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு ஏஞ்சல் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
ஆபிரகாம் நேற்று மாலையில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அனந்தனார் கால்வாயில் குளிக்க சென்றார். அப்போது ஆபிரகாம் கழிவறைக்கு சென்று விட்டார்.
கால்வாயில் ஏஞ்சல் துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கால்களை கழுவுவதற்காக கால்வாயில் இறங்குவது போல் நடித்து, ஏஞ்சல் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார்.
போலீஸ் தேடுகிறது
உடனே ஏஞ்சல் திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். அதே நேரம் கழிவறைக்கு சென்ற ஆபிரகாம் கால்வாய்க்கு வந்தார். மனைவியின் கூச்சல் கேட்டதும், மோட்டார் சைக்கிளில் தப்பியவரை விரட்டி சென்றார். அதற்குள் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார்.
இது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபரை தேடி வருகிறார்கள்.