17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை

ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-16 23:23 GMT

சேலம்,

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென மாயமானார். அவருடைய தந்தை கைகலத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னுடைய மகளை வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் உள்பட சிலர் கடத்தி சென்றதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மணிகண்டன் மற்றும் அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். விசாரணையில், திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் சிறுமியை மணிகண்டன் கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் சிறுமியை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

விஷம் குடித்த சிறுமி சாவு

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி அந்த சிறுமி வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆஸ்பத்திரியில் உள்ள பொது மருத்துவ கட்டிடம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடிதம் சிக்கியது

இதற்கிடையே சிறுமி எழுதியதாக பரபரப்பு கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி எனது பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உள்பட 3 பேர் எனது முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்தி சென்றனர். பாதி மயக்கத்தில் இருந்தபோது மணிகண்டன் என்னை கட்டாய திருமணம் செய்து கொண்டார். பின்னர் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக என்னை சொல்ல வைத்தார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் என்னையும், குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினர். பின்னர் அவர்கள் என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்து கொண்டு, நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் இந்த படங்களை உன் அண்ணனுக்கு அனுப்பி விடுவேன். இதன்மூலம் உங்கள் குடும்பமே தற்கொலை செய்து கொள்வார்கள் என்றுக் கூறி மிரட்டினர். எனது சாவிற்கு முழுக்க முழுக்க அவர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்