14 வயதில் இருந்தே திருட்டில் கைதேர்ந்தவன்: கேங் லீடராக 17 வயது சிறுவன்... அதிர்ந்த ஈரோடு போலீஸ்...!

விசாரணையில், 17 வயது சிறுவன் கேங் லீடராக செயல்பட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.

Update: 2023-03-17 04:49 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி காசிபாளையம் மணியகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் ஜெகதீஸ் (வயது 28). இவர் கோபி அருகே உள்ள டி.ஜி.புதூரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் மணியகாரன்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (27) என்பவர் வேலை செய்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு வியாபாரம் முடிந்து ஜெகதீசும், முருகேசனும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 6 செல்போன்கள், ஒரு மடிக்கணினி போன்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் கோபி டி.என்.பாளையம் அன்பு நகர் குமரன் கோவில் ரோட்டை சேர்ந்தவர் சதீஸ் (46). இவர் டி.என்.பாளையத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு இவருடைய கடையின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கேமரா, கம்ப்யூட்டர் மானிட்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கடை மற்றும் ஸ்டூடியோவில் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அணை அருகே உள்ள சதுமுகை பிரிவில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அவர்கள் 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்கள் 3 பேரையும் விரட்டி சென்று போலீசார் பிடித்தனர். பின்னர் பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், 'அவர்கள் கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமுகை அருகே பெல்லேபாளையம் வடபகதூரை சேர்ந்த வரதராஜன் மகன் நித்தீஸ் (21), கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள பாசரை புதுக்காலனியை சேர்ந்த வைரமுத்து மகன் விஜய் (23) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஜெகதீசின் செல்போன் கடை மற்றும் சதீசின் ஸ்டூடியோ கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்றதும்,' தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், 'இந்த கொள்ளை சம்பவத்தில் 17 வயது சிறுவன், தலைவராக செயல்பட்டு உள்ளான். 14 வயதில் இருந்தே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் அந்த சிறுவன் மீது சத்தியமங்கலம், சிறுமுகை, அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி, காரமடை, அன்னூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. செல்போன் மற்றும் ஸ்டூடியோவில் திருடிய பொருட்களை கொடிவேரி அனை பகுதியில் உள்ள புதரில் அவர்கள் 3 பேரும் மூட்டை கட்டி வைத்து இருந்ததும், அதை எடுக்க வந்தபோது போலீசிடம் வசமாக சிக்கியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து மடிக்கணினி, செல்போன்கள், கேமரா ஆகியவற்றையும் மீட்டனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்