பெண்ணின் வயிற்றில் இருந்த 12 கிலோ கட்டி அகற்றம்
செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயிற்றில் இருந்த 12 கிலோ கட்டி அகற்றம்
செஞ்சி
பெங்களூரை சேர்ந்தவர் தெரேசம்மாள்(வயது 74). இளம் வயதிலேயே கணவனை பிரிந்த இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அவரது தம்பி அருள் பிரான்சிஸ் என்பவருடன் வசித்து வந்தார். தெரேசம்மாளுக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலிஇருந்ததை அடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். டாக்டா்கள் பரிசோதனை செய்தபோது தெரசம்மாளின் வயிற்றில் கட்டி இருந்தது தெரிய வந்தது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவர் பிரசாந்த் தலைமையில் டாக்டர்கள் சரண்ராஜ், ராஜலட்சுமி, திவ்யா மற்றும் செவிலியர்கள் ஷீலா, ஷாகிராபானு, உதவியாளர்கள் சுப்ரமணி, தனலட்சுமி, அஞ்சலி ஆகியோரை கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்து தெரேசம்மாளின் வயிற்றிலிருந்த 12 கிலோ கட்டியை அகற்றினர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார். செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 2 பெண்களுக்கு இதுபோன்று வயிற்றில் கட்டி இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.