தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 1¼ வயது பெண் குழந்தை பலி
நாசரேத் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 1¼ வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உடையார்குளம் கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு நேபாள நாட்டைச் சேர்ந்த கோபிசிங் (வயது 36) என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து தோட்ட வேலைகளை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், ஒரு மகன் உண்டு.
நேற்று முன்தினம் மாலையில் கோபிசிங், மனைவியுடன் தோட்ட வேலைகளை செய்து கொண்டிருந்தார். அவர்களுடைய குழந்தைகள் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தனர். கடைசி குழந்தை அஸ்மாசிங் (1¼) தண்ணீர் தொட்டி அருகில் விளையாடி கொண்டிருந்தது.
தண்ணீர் தொட்டியில் விழுந்து சாவு
அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் விளையாட்டு பொருள் தவறி விழுந்தது. அதனை எடுப்பதற்காக தவழ்ந்து சென்ற குழந்தை அஸ்மாசிங் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.
சிறிதுநேரம் கழித்து பெற்றோர் குழந்தை அஸ்மாசிங்கை தேடியபோது, அவள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை அஸ்மாசிங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.