மதுரை செக்கானூரணியில் கி.பி.9-ம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை செக்கானூரணி அருகே கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள ஊருணி கரையில் கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.

Update: 2022-12-22 21:01 GMT


மதுரை செக்கானூரணி அருகே கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே உள்ள ஊருணி கரையில் கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.

கள ஆய்வு

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில், பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர் அனந்த குமரன் ஆகியோர் பன்னியான் மலை கணவாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி.9- ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிற்பம் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இது குறித்து முனீஸ்வரன் கூறியதாவது:-

பழங்கால, தமிழர்களின் வழிபாட்டுமுறை இயற்கையை அடிப்படையாக கொண்டது. பின்னர், பஞ்ச பூதங்கள் மற்றும் மரங்கள் ஆகியன வழிபடு பொருட்களாக மாறின. அதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாக பெண்ணை வழிபடும் மரபு, தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக மாறியது. தமிழகத்தின் மிக பழமையான பெண் தெய்வமாக உள்ள கொற்றவை பற்றி தொல்காப்பியத்திலும், இலக்கியங்களிலும் "பழையோள் காணாமற் செல்வி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகார காப்பியமாகும். இதற்கிடையே, இந்த ஆய்வின் போது, ஊருணி கரையில் புதைந்த நிலையில் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.

கொற்றவை சிற்பம்

இது 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, வட்ட வடிவிலான முகம் தேய்மானத்தோடு காணப்படுகிறது. இரு காதுகளில் பத்ர குண்டலங்கள், கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன், கைகளில் கைவளையல்கள் அணிந்து கம்பீரமாக நிற்பது போலவும், தன் கரங்களில் பிரயோகச் சக்கரம், சங்கு, ஏந்தியும் வலது கரத்தில் அபய முத்திரையும் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் அடிப்பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் மிக பிரமாண்டமாக எட்டு கைகளுடன் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட கொற்றவை காலப்போக்கில் நான்கு கைகளோடு எளிமையான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. 4 கைகளுடன் இருப்பதால் சதுர் புஜ துர்க்கை என்று அழைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் இதே போன்ற கொற்றவை சிற்பம் உள்ளது. அது 2-ம் வரகுண பாண்டியர்கள் காலத்தை சேர்ந்தவை. இங்கு கண்டறியப்பட்ட கொற்றவை உருவ அமைப்பை பொறுத்து இது கி.பி. 9-ம் நூற்றாண்டின் பிற்காலத்தில் முற்கால பாண்டியர்கள் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்