பிளஸ்-2 தேர்வில் 91 சதவீதம் தேர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.;

Update:2023-05-09 00:15 IST

தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 76 அரசு பள்ளிகள், 10 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 37 தனியார் பள்ளிகள் என மொத்தம் 123 பள்ளிகளை சேர்ந்த 9,056 மாணவர்கள், 9,325 மாணவிகள் என மொத்தம் 18,381 மாணவி-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது.

மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

இதில் 7,966 மாணவர்கள், 8,771 மாணவிகள் என மொத்தம் 16,737 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.06 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.96 சதவீதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.6 சதவீதம் ஆகும். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நிமிடங்களில் மாணவ- மாணவிகளின் செல்போனுக்கே அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், பாட வாரியாக குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் மாணவ- மாணவிகள் எந்தவித சிரமமும் இன்றி தங்களது வீட்டில் இருந்தவாறே செல்போன் குறுந்தகவல் மூலம் தாங்கள் பாட வாரியாக பெற்ற மதிப்பெண் விவரத்தை தெரிந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்