பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.15 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதில் தனித்தேர்வர்கள் மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் என்று ஏராளமானோர் தேர்வு எழுதினர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 594 மாணவர்களும், 5 ஆயிரத்து 743 மாணவிகளும் தேர்வு எழுதினர். மாணவ-மாணவிகள் எழுதிய விடைதாள்கள் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணி 27-ந் தேதி வரை நடந்தது. இதை தொடர்ந்து, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ந் தேதி வெளியிடப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நீட் தேர்வு நாடு முழுவதும் மே 7-ந் தேதி நடப்பதால், மாணவர்களிடம் தேவையற்ற மன உளைச்சலை தவிர்ப்பதற்காக பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நீட் தேர்வு நடைபெற்று முடிந்த அடுத்த நாளான நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
90.15 சதவீதம் தேர்ச்சி
இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. அதன்படி 10 ஆயிரத்து 337 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 977 மாணவர்களும், 5 ஆயிரத்து 342 மாணவிகளும் என 9 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதில் மாணவர்கள் 86.57 சதவீதம், மாணவிகள் 93.02 சதவீதம் ஆகும். ஆகமொத்தம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.15 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.36 சதவீத மாணாவர்கள் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 0.21% குறைவாக தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.