கொள்முதல் நிறுத்தத்தால் 900 குவிண்டால் பருத்தி தேக்கம்
கொள்முதல் நிறுத்தத்தால் 900 குவிண்டால் பருத்தி தேக்கம்
திருப்பனந்தாள:
திருப்பனந்தாள் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொள்முதல் நிறுத்தத்தால் 900 குவிண்டால் பருத்தி தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பருத்தி மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
900 குவிண்டால் பருத்தி தேக்கம்
திருப்பனந்தாள் வட்டாரத்தில் உள்ள முட்டக்குடி, சிற்றிடையாநல்லூர், மணிக்குடி, கட்டாநகரம், அணைக்கரை, சாத்தனூர், தத்துவாஞ்சேரி, பட்டம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருப்பனந்தாள் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொள்முதல் நிறுத்தப்பட்டது.
இதனால் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான 900 குவிண்டால் பருத்தி கொள்முதல் தேக்கம் அடைந்துள்ளது. இன்று(வியாழக்கிழமை) பருத்தி ஏலம் நடைபெறுகிறது. ஆனால் விவசாயிகள் தங்களது பருத்தியை கொள்முதல் செய்ய முடியாமல் மூட்டைகளுடன் காத்திருந்து இருக்கின்றனர்.
4 கிராமங்களுக்கு ஒரு கொள்முதல் மையம்
இதுகுறித்து தமிழ்நாடு குத்தகை விவசாயிகள் சங்க தலைவர் கூறுகையில், திருப்பனந்தாள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. ஏதாவது காரணம் சொல்லி விலையை குறைவாக நிர்ணயிக்கின்றனர். சரியான விலை நிர்ணயம் இல்லையெனில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். நேரடி நெல் கொள்முதல் செய்துவது போல் 4 கிராமங்களுக்கு ஒரு பருத்தி கொள்முதல் மையம் அமைக்கவேண்டும் என்றார்.