5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 9 வயது சிறுமி-தொண்டையில் சிக்கி இருந்ததை அரசு டாக்டர்கள் லாவகமாக எடுத்தனர்
5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 9 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கி இருந்ததை அரசு டாக்டர்கள் லாவகமாக எடுத்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி காமனேரியை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வம்- பேபி ஷாலினி. இந்த தம்பதியின் 9 வயது மகள் நேகா. அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் காலையில் நேகா 5 ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விளையாடி கொண்டிருந்தாள். அந்த நாணயம் திடீரென அவளது தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே சிறுமியை, ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு நேகாவுக்கு மின்னல் வேகத்தில் சிகிச்சை தொடங்கப்பட்டது. சிறுமியின் தொண்டைப்பகுதி எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. நேகா தொண்டையில் சிக்கி இருந்த நாணயத்தை எடுப்பதற்கான சிகிச்சையை தொடங்கினர். நேகாவுக்கு மயக்கவியல் டாக்டர்கள் இளங்கோ, அபிராமி ஆகியோர் மயக்க மருந்து கொடுத்தனர்.
அதன்பிறகு உள்நோக்கி என்ற கருவி மூலம் நேகா தொண்டையில் சிக்கி இருந்த 5 ரூபாய் நாணயத்தை டாக்டர்கள் குழு லாவகமாக வெளியே எடுத்தனர். அதன்பிறகு சிறுமிக்கு ஏற்பட்டு இருந்த மூச்சு திணறல் சரியானது. நேகா தொண்டையில் இருந்து நாணயம் வெளியே எடுக்கப்பட்டதை அறிந்த பெற்றோர் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர். துரிதமாக செயல்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவை மாவட்ட இணை இயக்குனர் பானுமதி, மருத்துவ அலுவலர் நாக புஷ்பவள்ளி மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.