நல்லாசிரியர் விருதுக்கு 9 ஆசிரியர்கள் தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-09-04 18:45 GMT

மாணவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் ஆசிரியராக தன்னுடைய வாழ்வைத்தொடங்கி இந்திய நாட்டின் குடியரசு தலைவராக உயர்ந்து ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும் சிறப்பினை சேர்த்த தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த கல்வித்தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 369 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

9 ஆசிரியர்கள் தேர்வு

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க கல்விப்பிரிவில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் மேலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பெ.அன்பழகன், சித்தனாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஞா.சின்னப்பராஜ், செஞ்சி ஒன்றியம் செம்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை கோ.அல்லி, பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெ.ஜெய்சங்கர், பள்ளிக்கல்விப் பிரிவில் கல்யாணம்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மு.ச.ராசன், சென்னகுணம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தி.க.நாகராஜன், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கஜேந்திரன், பொய்யப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.ஆறுமுகம், மெட்ரிக் பள்ளிப் பிரிவில் சிறுகடம்பூர் சாரதா மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை சிவசங்கரி ஆகிய 9 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்