சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 9 பேர் காயம்

செம்பட்டிவிடுதி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-01-19 18:07 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே முக்காணிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று நடந்தது. இதையொட்டி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையும், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

9 பேர் காயம்

தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 125 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் ஆலங்குடி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 438 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வீரர்களும் சுழற்சி முறையில் 5 சுற்றுகளாக களம் இறக்கப்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பரிசு

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், விழாக்குழுவினரால் ரொக்கம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் இதில் 20 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த கவாஸ் என்பவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல் வாடிவாசலில் இருந்து வெளியேறி களத்தில் நீண்ட நேரம் வீரர்களிடம் பிடிபடாத செம்பட்டிவிடுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமாேனார் வாகனங்கள், தடுப்பு கட்டைகள், மாடி வீடுகள், மரங்களில் ஏறி நின்று கண்டு களித்தனர்.

ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்