கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 கர்ப்பிணிகள் உள்பட 9 பேர் அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 கர்ப்பிணிகள் உள்பட 9 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனை டீன் நேரு தலைமையில் செயல்படும் இந்த மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளன. மேலும் தற்போது, திருச்சி மாநகராட்சிக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. அதை எதிர்கொள்ள, திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிகள் உள்பட 9 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் டாக்டர் நேரு கூறியுள்ளார்.