ரூ.10 லட்சம் மின் பொருட்கள் திருட்டு வழக்கில் 9 பேர் கைது

ரூ.10 லட்சம் மின் பொருட்கள் திருட்டு வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-03 18:50 GMT

குன்னம்:

மின் பொருட்கள் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வெண்மணி கிராமத்தில், அரியலூர் திட்டக்குடி சாலையில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த துணை மின் நிலையத்தின் பணிக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் மீட்டர் காப்பர் கேபிள் வயர் மற்றும் 27 தொகுப்பு அலுமினியம் பஸ் பார் ஆகியவற்றை கடந்த மார்ச் மாதம் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து குன்னம் போலீசில் கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி சென்னையை சேர்ந்த லட்சுமணன் புகார் அளித்தார். அதன்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

9 பேர் கைது

இந்நிலையில் மின் பொருட்கள் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பெரம்பலூர் காந்தி நகரை சேர்ந்த செந்தில் மகன் சுப்பிரமணி(வயது 23), பாண்டியன்(49), பெரம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த வேலு மகன் பூபதி(24), முருகேசன் மகன் கருப்பையா(34), அத்தியூர் கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கத்தின் மகன்கள் பெரியசாமி(28), சரவணன்(26), சரவணனின் மனைவி திவ்யா(19) ஆகிய 7 பேரையும், திருட்டு பொருட்களை வாங்கிய பெரம்பலூர் செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த அன்பரசன்(46), வேப்பூர் கிராமம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த அப்துல்கபூர்(44) ஆகிய 2 பேரையும் என மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட மின்பொருட்களில் ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பறிமுதல் செய்தார். கைது செய்யப்பட்ட 9 பேரையும், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி, பின்னர் அவர்களை திருச்சி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்