தேனியில் 8.6 செ.மீ. மழை கொட்டியது:பள்ளி முன்பு சாய்ந்த மரம்
தேனியில் நேற்று முன்தினம் 8.6 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரத்துக்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் மொத்தம் 21.8 செ.மீ. மழையளவு பதிவானது. இதன் சராசரி மழையளவு 1.67 செ.மீ. ஆகும். தேனியில் பெய்யும் மழையளவு தேனியை அடுத்த அரண்மனைப்புதூரில் உள்ள மழைமானியில் பதிவு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அங்கு 8.6 செ.மீ. மழையளவு பதிவானது.
அதற்கு அடுத்தபடியாக ஆண்டிப்பட்டியில் 6.8 செ.மீ., வீரபாண்டியில் 1.84 செ.மீ., மஞ்சளாற்றில் 10 மி.மீ., பெரியகுளத்தில் 8 மி.மீ., சோத்துப்பாறையில் 9 மி.மீ., வைகை அணையில் 9.2 மி.மீ., போடியில் 8.2 மி.மீ., கூடலூரில் 1.2 மி.மீ. மழையளவு பதிவானது. தேனி கே.ஆர்.ஆர். நகர் மெயின் ரோட்டில் தனியார் மழலையர் பள்ளி முன்பு ஒரு வேப்பமரம் சாய்ந்தது. அந்த மரம் மின்கம்பிகளில் சாய்ந்த நிலையில் தரையில் விழாமல் சாலையின் குறுக்காக நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். மின்கம்பிகளில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு மின்சார வினியோகம் சீரானது.