குழந்தையை கடத்தி வைத்து ஒரே பெண்ணை 8 பேருக்கு திருமணம்...! புதுமாப்பிள்ளைகளிடம் லட்சங்களை கறந்த கும்பல்..!

3-வது நாளில் தனபால் காலையில் எழுந்து பார்த்தபோது ‌‌தனது ஆசை மனைவி சந்தியாவை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Update: 2022-09-24 10:06 GMT

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் தனபால் (வயது 37). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தியா (27). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 7-ந் தேதி பரமத்திவேலூர் அண்ணா நகர் அருகே உள்ள புதுவெங்கரையம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் மணமகளின் அக்காள் மற்றும் மாமா என 2 பேர் மட்டுமே வந்திருந்ததாக‌ கூறப்படுகிறது. திருமணத்திற்கு ஏற்பாடு செய்த திண்டுக்கல் மாவட்டம் தாதன்குளத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் (45) என்பவர் திருமணம் முடிந்த பின்னர் அதற்கான கமிஷன் தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்று கொண்டு மணமகளின் அக்கா மற்றும் மாமா என்று கூறி வந்த 2 பேரையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.

செல்போன்கள் 'சுவிட்ச் ஆப்' இந்த நிலையில் புதுமாப்பிள்ளை தனபால் பல கனவுகளுடன் தனது வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் 2 நாட்களில் தனபாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

3-வது நாளில் தனபால் காலையில் எழுந்து பார்த்தபோது ‌‌தனது ஆசை மனைவி சந்தியாவை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தனபால் உடனே மனைவி சந்தியா, புரோக்கர் பாலமுருகன் மற்றும் உறவினர்களாக வந்த 2 பேருக்கு போன் செய்தபோது, அனைவரது செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது திருமண பட்டு சேலை மற்றும் சந்தியா கொண்டு வந்த துணிமணிகள் இல்லாததை கண்டு திடுக்கிட்ட தனபால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து தனபால் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது ஒருபுறம் இருக்க அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடியபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்ததை அறிந்த தனபால் அந்த நபர் மூலம் சந்தியா, புரோக்கர் மற்றும் உடன் வந்தவர்களை பிடிக்க எண்ணினார்.

அதன்படி அந்த நபர் திருமணம் செய்து கொள்ள தனது விருப்பத்தை மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமியிடம் (45) கூறினார். பின்னர் மணமகனின் போட்டோவையும் புரோக்கரிடம் கொடுத்தனர்.

அதில் மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்துள்ளது என தனலட்சுமி செல்போனில் கூறியதையடுத்து திருமணத்தை முடிவு செய்தனர். நகை, பணம் மோசடி இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்து மணப்பெண் சந்தியா மற்றும் தனலட்சுமியின் உறவினர் என கூறப்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்தனர்.

அப்போது அங்கு நின்ற தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து சந்தியா, அவருடன் வந்தவர்களை மடக்கி பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்களை நடத்தி வைத்து நகை, பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

7-வது திருமணம் தற்போது சந்தியாவுக்கு திருச்செங்கோட்டில் நடைபெற இருந்தது 7-வது திருமணம் ஆகும். இதையடுத்து சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, மதுரை மாவட்டம் வில்லாபுரம் அம்மாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மெக்கானிக் கவுதம் (26), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேல்நாச்சியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார் டிரைவர் ஜெயவேல் (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான புரோக்கர் பாலமுருகன் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் அய்யப்பன் (28) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான 'கல்யாண ராணி' சந்தியா ஒவ்வொரு திருமணத்தின்போதும் மணமகன் வீட்டில் இருந்து நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மாயமாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இந்த மோசடியில் ஒரு கும்பலே ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த திருமண மோசடி கும்பலுடன் சேர்ந்து திருமணம் செய்வதையே முழு நேர தொழிலாக வைத்துள்ள சந்தியா, தயக்கமே இல்லாமல் இதுவரை 6 பேரை திருமணம் செய்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் அடுத்த நொடியே தனது குழந்தையை கடத்தி வைத்து புரோக்கர் பாலமுருகன் மிரட்டியதால் தான் மோசடி திருமணங்களுக்கு சம்மதித்ததாக தெரிவித்தார்.

6 வது கணவன் மன்னித்து ஏற்றுகொள்வதாக கூறுகிறான் அவனுடன் வாழத்தயாரா ? என்று கேட்ட போது எனக்கு குழந்தைகள் இருக்கு, என்னால யாருக்கும் அசிங்கம் வேண்டாம் என்று கூறி கண்ணீர் சிந்தினார் சந்தியா.

இதற்க்கிடையே மாப்பிள்ளை வீட்டில் இருந்து தப்பி வரும் சந்தியாவை பத்திரமாக தனது காரில் ஏற்றிச்செல்வதை வழக்கமாக செய்த ஓட்டுனர் ஜெயவேலை காட்டிக் கொடுத்த அப்ரூவர் அய்யப்பன் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீசாரிடம் தனக்கு வாந்தி வருவதாக கூறி காவல் நிலையத்துக்கு வெளியே வந்த அய்யப்பன் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது. 8ஆவதாக திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளையிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இந்த கும்பல் ஏமாற்றி வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்