நடுக்கடல் மணல் திட்டில் குழந்தைகள் உள்பட 8 பேர் தவிப்பு

இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் குழந்தைகள் உள்பட 8 பேர் தவித்தனர். அவர்களை கடலோர காவல் படை கப்பல் மீட்டது.

Update: 2022-08-27 18:20 GMT

ராமேசுவரம், 

இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்து தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் குழந்தைகள் உள்பட 8 பேர் தவித்தனர். அவர்களை கடலோர காவல் படை கப்பல் மீட்டது.

குழந்தைகளுடன் தவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து கடல் வழியாக ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடிக்கு அகதிகளாக படகுகளில் தப்பி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கையின் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து படகு ஒன்றில் 5 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 8 பேர், நள்ளிரவு தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 1-வது மணல் திட்டு பகுதியில் வந்திறங்கி பரிதவித்துள்ளனர்.

கப்பல் மூலம் மீட்பு

இது பற்றி தகவல் கிடைத்ததும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பல் மூலம் 1-வது மணல் திட்டு பகுதிக்கு சென்று மணல் திட்டில் நின்றிருந்த 8 பேரையும் கப்பலில் ஏற்றி, அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதைதொடர்ந்து 8 பேரும் மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.

விசாரணையில் அவர்கள் இந்துமதி (வயது 65), ஜெயந்தினி (30), இவருடைய குழந்தைகள் இனியா (10), ஹரிகரன் (7), தனுசன் (4) மற்றும் சசிக்குமார் (40), இவருடைய குழந்தைகள் சுபிஸ்கா (9) மோஹித் ( 7) என தெரியவந்தது. இந்த 8 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஏற்கனவே தமிழகம் வந்தவர்

இலங்கையில் இருந்து தப்பி வந்ததற்கான காரணம் குறித்து அவர்கள் கூறும்போது, "இலங்கையில் அரிசி, காய்கறி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே கிடைக்காமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகி்ன்றனர். குழந்தைகளுக்கு தேவையான உணவுப்பொருட்களும் கிடைக்கவில்லை. அங்கு நிலைமை சீராக எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளையும் கடத்துவது மிகவும் கடினமாக இருந்தது.

பிைழப்புக்கு வழி இல்லாததால் படகில் தப்பி வந்தோம். எங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இலங்கையை சேர்ந்த படகோட்டிகள், எங்களை அழைத்து வந்து நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து சென்றுவிட்டனர். குழந்தைகளுடன் அங்கு தவித்த நாங்கள் மீட்கப்பட்டு உள்ளோம்" என்றனர்.

இந்த 8 பேரில் வந்துள்ள இந்துமதி என்ற மூதாட்டி ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக கள்ளத்தனமாக படகுமூலம் இலங்கைக்கு தப்பிச் சென்றவர் ஆவார். இந்தநிலையில் மீண்டும் அவர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார். விசாரணைக்கு பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்