சென்னை,
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள ஆதனூர் கிராம பஞ்சாயத்தில், பொதுமக்கள் உபயோகத்துக்காக சாலை வசதி, பூங்கா வசதி செய்து கொடுப்பதற்காக ஏராளமான நிலங்கள் தானமாக பஞ்சாயத்துக்கு வழங்கப்பட்டது. அந்த நிலத்தை தங்களது நிலம் போல பொது அதிகார பத்திரம் மூலம் போலி ஆவணங்கள் தயார் செய்து சிலர் 2 வங்கிகளில் ரூ.12 கோடி வரை தொழில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டதாக ஆதனூரை சேர்ந்த மாலா (வயது 51), கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (47), அம்பத்தூர் விக்னேஷ் (32) கொரட்டூர் முத்துசெல்வன் (44), அவரது மனைவி சிவரஞ்சனி (37), கொரட்டூரை சேர்ந்த சங்கரேஸ்வரி (40), அவரது கணவர் சீனிவாசன் (46) மற்றும் கேரளாவை சேர்ந்த சிவராஜ் (41) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.