ஆழ்துளை கிணறு அமைத்ததில் சேவை குறைபாடு: 2 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் வேளாண்மை அதிகாரிகளுக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

ஆழ்துளை கிணறு அமைத்ததில் ஏற்பட்ட சேவை குறைபாடுகளுக்கு 2 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் வேளாண்மை அதிகாரிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-11-17 18:45 GMT

ஆழ்துளை கிணறு

கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சாமிமுத்து மகன் செந்தில்குமார் (வயது 38). குறிஞ்சிப்பாடி புலியூர் காட்டு சாகையை சேர்ந்தவர் சாரங்கபாணி மகன் ராஜசேகர் (38). விவசாயிகளான இவர்கள் தங்களுக்கு சொந்தமான வடக்கு வசனாங்குப்பத்தில் உள்ள நிலத்தில் முந்திரி உள்ளிட்ட பயிர்களை பயிர் இடுவதற்காக மானியத்தில் தனித்தனியாக ஆழ்துளை கிணறு அமைத்தனர். இதற்காக செந்தில்குமார் ரூ.3 லட்சத்து 80 ஆயிரமும், ராஜசேகர் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் செலுத்தினர்.

ஆனால் இந்த ஆழ்துளை கிணறுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலால், பூமிக்குள் புதைந்து விட்டது. மோட்டார்களை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளிடம், அதை சரி செய்து தருமாறு கேட்டனர். அதற்குள் அவர்கள் உரிய பதில் அளிக்காமல், தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று கூறி விட்டனர்.

இழப்பீடு வழங்க உத்தரவு

இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2016-ம் ஆண்டு கடலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

அதில், கடலூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர், சின்ன கங்கணாங்குப்பம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோரின் சேவை குறைபாட்டால் செந்தில்குமாருக்கு மானிய தொகையான ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தையும், ராஜசேகருக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்தையும் திருப்பி வழங்க வேண்டும். மேலும் வருமான இழப்பு, பொருள் நஷ்டம், மன உளைச்சலுக்கு தலா ரூ.50 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்