மின்கசிவால் குடோனில் 'தீ'; 8 லட்சம் தேங்காய்கள் எரிந்து நாசம்

கபிலர்மலை அருகே மின்கசிவால் குடோனில் தீப்பிடித்து 8 லட்சம் தேங்காய்கள் எரிந்து நாசமானது.

Update: 2023-10-01 18:45 GMT

பரமத்திவேலூர்

மின்கசிவால் தீ

பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி தலைவராக இருப்பவர் வடிவேல் (வயது 50). இவருக்கு சொந்தமான குடோன் கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலை செம்மடைபாளையம் பகுதியில் உள்ளது. வடிவேலின் குடோனை அதேபகுதியை சேர்ந்த பொங்கியண்ணன் என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் தேங்காய்களை குவித்து வைத்திருந்தார். தேங்காய் விலை தற்போது குறைவாக இருப்பதால், தேங்காய்களை உரிக்காமல் மட்டையுடன் குவிக்கப்பட்டு அதன் மேல் தேங்காய் நார் மற்றும் மட்டைகளை போட்டிருந்தார். தேங்காய்கள் குவித்து வைகக்ப்பட்டிருந்த பகுதிக்கு மேலே மின்கம்பிகள் சென்று கொண்டிருந்தன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் வேகமாக காற்று அடித்ததால் மின்கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பொறிகள் தேங்காய் மட்டையில் விழுந்தது. இதனால் தேங்காய் மட்டையில் தீப்பிடித்து எரிந்தது. தேங்காய் குடோனில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் காற்றின் மூலம் தீ வேகமாக பரவி தேங்காய்கள் முழுவதும் தீப்பிடித்தது.

தேங்காய்கள் நாசம்

இதுகுறித்து பொங்கியண்ணன் நாமக்கல் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சுமார் 5 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான 8 லட்சம் தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாயின. சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்