பட்டாசு வெடித்ததில் 8 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்ததில் 8 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது

Update: 2022-10-25 18:45 GMT

விழுப்புரம்

8 வீடுகளில் தீ விபத்து

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து மிகவும் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதனிடையே சில இடங்களில் பட்டாசு வெடித்தபோது அருகில் உள்ள கூரை வீடுகளும், குடிசை வீடுகளும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

விழுப்புரம் அருகே பனங்குப்பம் தோப்பு தெரு பகுதியை சேர்ந்த திருமால், விக்கிரவாண்டி அருகே விநாயகபுரம் முதல் தெருவை சேர்ந்த சங்கர், விழுப்புரம் அருகே ப.வில்லியனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன், சின்னக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்த கோவிந்தம்மாள், விழுப்புரம் முத்தோப்பு வடக்கு தெருவை சேர்ந்த ராஜா, திண்டிவனம் அருகே கிடங்கல்- 1 பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகியோரின் கூரை வீடுகளும், விக்கிரவாண்டி அருகே ஒரத்தூரை சேர்ந்த ரமேஷ், கோட்டக்குப்பம் அருகே பெரியமுதலியார்சாவடியை சேர்ந்த சுகுமார் ஆகியோரின் குடிசை வீடுகளும் பட்டாசு தீ விபத்தில் எரிந்தது.

ரூ.10 லட்சம் சேதம்

உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 8 வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் வீடுகளில் இருந்த டி.வி., கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் துணிமணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதன் சேத மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கூரை வீட்டில் தீ விபத்து

திண்டிவனம் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஒத்தவாடு தெருவில் வசித்து வந்தவர் ஆறுமுகம் மகள் ஜோதி(40), இவருடைய தந்தையின் கூரைவீடு பழுதடைந்ததால் அருகில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இருப்பினும் தந்தையின் வீட்டை அடிக்கடி சென்று பார்த்து வருவார். சம்பவத்தன்று காலை கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. ராக்கெட் வெடி விழுந்து கூரை வீடு சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்