திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 72.37 சதவீதம் வாக்குப்பதிவு
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 72.37 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 72.37 சதவீதம் பேர் வாக்களித்தனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
இடைத்தேர்தல்
திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் 17 பதவிகள் காலியாக உள்ளன. அவற்றுக்கு மட்டும் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 3 பேரும், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் பளுவஞ்சி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேரும் போட்டியிட்டனர்.
போட்டியின்றி தேர்வு
இதுபோல் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இதில் திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சி 3-வது வார்டு, மணப்பாறை ஒன்றியம் எப்.கீழையூர் ஊராட்சி 5-வது வார்டு, புள்ளம்பாடி ஊராட்சி நெய்குளம் ஊராட்சி 7-வது வார்டு, தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் பிடாரமங்கலம் ஊராட்சி 3-வது வார்டு, தா.பேட்டை ஒன்றியம் சிட்லறை ஊராட்சி 9-வது வார்டு, துறையூர் ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சி 4-வது வார்டு ஆகிய கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால் இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
11 பதவிகளுக்கு தேர்தல்
அதே நேரம், அந்தநல்லூர் ஒன்றியத்தில் அல்லூர் ஊராட்சி 5-வது வார்டு, மணப்பாறை ஒன்றியத்தில் புத்தாநத்தம் ஊராட்சி 5-வது வார்டு, லால்குடி ஒன்றியத்தில் அரியூர் ஊராட்சி 1-வது வார்டு, மண்ணச்சநல்லூர் ஒன்றித்தில் தீராம்பாளையம் ஊராட்சி 2-வது வார்டு, 3-வது வார்டு, 5-வது வார்டு, 8-வது வார்டு ஆகிய 7 வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா 2 பேரும், தீராம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் போட்டியிடுகிறார்கள்.
மொத்தத்தில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 11 பதவிகளுக்கு மட்டும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வந்து வாக்களித்தனர். அதுமட்டுமின்றி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களுடன் வந்து வாக்களித்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அவை பாதுகாப்பாக ஒரு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு விவரம்
துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலுக்கு 2,415 ஆண்கள், 2,487 பெண்கள் என்று 4,902 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால் நேற்று 1,674 ஆண்கள், 1,906 பெண்கள் என்று 3,580 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதாவது 73.03 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
இதுபோல் லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலுக்கு 1,173 ஆண்கள், 1,217 பெண்கள், ஒரு திருநங்கை என்று 2,391 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இதில் நேற்று 859 ஆண்கள், 895 பெண்கள், ஒரு திருநங்கை என்று 1,755 பேர் வாக்களித்தனர். அதாவது 73.40 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர். மேலும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் பளுவஞ்சி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலுக்கு 735 ஆண்கள், 769 பெண்கள் என்று 1,504 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இவர்களில் நேற்று 516 ஆண்கள், 565 பெண்கள் என்று 1,081 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதாவது 71.88 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.
அல்லூர் ஊராட்சி
அந்தநல்லூர் ஒன்றியத்தில் அல்லூர் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 328 வாக்காளர்களில் 198 பேரும், மணப்பாறை ஒன்றியத்தில் புத்தாநத்தம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 557 வாக்காளர்களில் 303 பேரும், லால்குடி ஒன்றியத்தில் அரியூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 287 வாக்காளர்களில் 213 பேரும் வாக்களித்திருந்தனர். இதுபோல் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் தீராம்பாளையம் ஊராட்சி 2-வது, 3-வது, 5-வது, 6-வது மற்றும் 8-வது வார்டு உறுப்பினர் என்று 5 வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் மொத்தம் 1,694 வாக்காளர்களில் 1,310 பேரும் வாக்களித்திருந்தனர்.
72.37 சதவீதம் வாக்குப்பதிவு
திருச்சி மாவட்டத்தில் 11 பதவிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தம் 11 ஆயிரத்து 663 வாக்காளர்களில் 8,440 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். அதாவது 72.37 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இதில் ஆண்கள் 69.78 சதவீதம் பேரும், பெண்கள் 74.86 சதவீதம் பேரும் வாக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருகிற 12-ந்தேதி அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறஉள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.