சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு

சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-09-25 09:57 GMT

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் லியாகத் (வயது 60). பிரியாணி கடையில் வேலை பார்த்து வரும் இவர், 2019-ம் ஆண்டு டி.பி.சத்திரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது செனாய்நகரைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா (29) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி லியாகத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டார். அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ், போலீஸ்காரர் மதியழகன் ஆகியோர் இதை தடுக்க முயன்றனர். இதைப்பார்த்த ராஜேஷ் கண்ணா அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டினார். இதன்பின்பு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றார். அவரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போதும் போலீசாரை கத்தியால் வெட்ட முயன்றார்.ராஜேஷ் கண்ணாவின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முயன்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் கண்ணாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜேஷ்கண்ணா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்