அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

Update: 2023-07-28 19:00 GMT

கோவை

கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் 47 அரசு பஸ்களை ஏலம் விட்டு லட்சக்கணக்கில் முறைகேடு செய்த முன்னாள் அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 32 லட்சம் அபராதமும் விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

அரசு பஸ்களை ஏலம் விட்டதில் முறைகேடு

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பஸ் போக்குவரத்து கழகம் (சி.டி.சி.) உள்ளது. இங்கு கடந்த 1.1.1988-ம் ஆண்டு ஓடாத நிலையில் உள்ள 55 பஸ்களை பழைய இரும்பு பொருட்களுக்கு விற்க ஏலம் விடுவதாக டெண்டர் கோரினார்கள். ரூ.28 லட்சத்து 20 ஆயிரத்து 94-க்கு ஏலம் விட மதிப்பு நிர்ணயிக்கப்பட்டநிலையில், ரூ.10 ஆயிரத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்டு மோசடி நடைபெற்றதாகவும், இதில் பழைய பில்களை வைத்து மோசடி நடைபெற்றதாகவும் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

8 பேர் மீது வழக்குப்பதிவு

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி கோதண்டபாணி, ராமச்சந்திரன், நாகராஜன், நடராஜன் என்ற கண்ணன், முருகநாதன், துரைசாமி, ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அரசுக்கு ரூ.28 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை நடந்தநிலையில், ராமச்சந்திரன், நடராஜன், ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகிய 4 பேர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார்கள். 55 பஸ்களில் 47 பஸ்களை ஏலம்விட்டத்தில் கோதண்டபாணி, நாகராஜன், முருகநாதன், துரைசாமி ஆகிய 4 பேர் மீது மட்டும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் நடைபெற்றது. 31 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அரசு போக்குவரத்து கழக அதிகாரி கோதண்டபாணிக்கு தண்டனை விதித்தும், நாகராஜன், முருகநாதன், துரைசாமி ஆகியோரை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் சட்டப்பிரிவு 409 (அரசு ஊழியர் நம்பிக்கை மோசடி செய்தல்) சட்டப்பிரிவில் 4 ஆண்டு வீதம் 47 பஸ்களுக்கு 188 ஆண்டுகள் சிறை தண்டனையும், சட்டப்பிரிவு 467 (போலி ஆவணங்களை உருவாக்குதல்) பிரிவில் 47 பஸ்களுக்கு 4 ஆண்டுகள் வீதம் 188 ஆண்டுகளும், சட்டப்பிரிவு 413 (தவறான ஆவணங்களுடன் திருடப்பட்ட சொத்து) பிரிவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் ரூ.3 கோடியே 32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்

கோதண்டபாணிக்கு தற்போது 82 வயது ஆகிறது, மொத்தம் 383 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், வயதை கருத்தில் கொண்டு ஏககாலத்தில் இதனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் 7 ஆண்டுகள் மட்டும் கோதாண்டபாணி சிறை தண்டனை அனுபவிப்பார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜர் ஆனார். அவர் கூறும்போது, இந்த வழக்கில் 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. மேலும் பஸ்களின் உதிரிபாகங்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்க கூடிய தொகையை அரசு போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தவும் நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்