பெரும்பாக்கத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது
பெரும்பாக்கத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 33 வயது பெண், தன் கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக மகேஷ்குமார் (33) என்பவருடன் வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலமாக பிறந்த 7 வயதான பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் அந்த பெண் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமியிடம், மகேஷ்குமார் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டு வலியால் துடித்தாள்.
வீட்டுக்கு வந்த அந்த பெண், தனது மகளை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், இது குறித்து சேலையூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.