கத்தியுடன் சுற்றித்திரிந்த 7 பேர் சிக்கினர்

கருமத்தம்பட்டி அருகே இரவு நேரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-01-12 18:45 GMT

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அருகே இரவு நேரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்மநபர்கள்

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சங்கோதிபாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சிறு, குறு என பல தொழிற்சாலைகளும், அதில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்காக ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. அங்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு பட்டாக் கத்திகளுடன் சிலர் சுற்றிதிரிந்துள்ளனர். அவர்கள் வட மாநில தொழிலாளர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக தெரிகிறது. மேலும் பூட்டிய வீட்டிற்கு புகுந்து திருடியதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்கள் அச்சம்

இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கத்தியுடன் சுற்றித்திரியும் வீடியோ சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சின்ன காமன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இந்த பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்தது ஈரோடு மாவட்டம் பவானி சாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

7 பேர் கைது

அதனை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசிந்த 3 பேர் உள்பட 7 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருமத்தம்பட்டி அருகே இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கத்தியுடன் சுற்றித்திரிந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்