வாலிபரை தாக்கிய 7 பேருக்கு தலா ஓராண்டு சிறை
உளுந்தூர்பேட்டையில் வாலிபரை தாக்கிய 7 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாடல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் மதியழகன் (வயது 30). கடந்த 18.4.2019 அன்று உளுந்தூர்பேட்டை மாடல் காலனியை சேர்ந்தவர்களுக்கும், உளுந்தூர்பேட்டை படையாட்சி தெருவை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு இரு தரப்பினரும் தகராறு செய்து கொண்டனர்.
இந்நிலையில் அன்று மாலையில் மதியழகன் அதே பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உளுந்தூர்பேட்டை படையாட்சி தெருவை சேர்ந்த தர்மராஜ், சத்யராஜ், தினேஷ்பாபு, ஸ்ரீதர், விஜய், நாராயணன், மணிபாலன் ஆகிய 7 பேரும் சேர்ந்து முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மதியழகனை சாதி பெயரை சொல்லி திட்டி இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டையால் தாக்கினர்.
இதுகுறித்து மதியழகன், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தர்மராஜ் உள்ளிட்ட 7 பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட தர்மராஜ் உள்ளிட்ட 7 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.