ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 7 பஞ்சலோக சிலைகள் திருட்டு

ஆரணி அருகே தொன்மைவாய்ந்த ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 7 பஞ்சலோக சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-22 12:58 GMT

ஆரணி

ஆரணி அருகே தொன்மைவாய்ந்த ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து 7 பஞ்சலோக சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெயின் கோவில்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சி பூண்டி கிராமத்தில் பொன்னெழில் நாதர் ஜெயின் கோவில் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை பாதுகாவலர் வந்து கோவிலின் மெயின் கதவை திறந்து உள்ளே சென்றபோது கோவிலில் கருவறை கதவுகளில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக கோவில் நிர்வாகியும், பொருளாளருமான அசோக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தலைவர் சி.அப்பாண்டைராஜ், செயலாளர் நேமிராஜன் ஆகியோர் கோவிலுக்கு வந்து பார்த்தனர்.

7 பஞ்சலோக சிலைகள் திருட்டு

கோவில் கருவறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ¾ அடி உயரமுள்ள 2 பார்சுவநாதர் திகம்பர் சிலைகளும், சுமார் ¾ அடி உயரமுள்ள தர்மேந்திரர், பத்மாவதி தாயார் சிலைகளும், சுமார் ½ அடி உயரமுள்ள ஜோலமாலினி, சக்ரேஸ்வரி ஆகிய சிலைகளும், 1½ அடி உயரமுள்ள அனந்த நாத தீர்த்தங்கர் சிலையும் ஆக மொத்தம் 7 சிலைகள் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த 7 சிலைகளும் பல 100 ஆண்டுகளான பஞ்சலோக சிலைகளாகும்.

மேலும் அங்கிருந்த சிறிய உண்டியலும் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மிளகாய் பொடி

மேலும் கொள்ளையர்கள் கோவிலில் ஆங்காங்கே மிளகாய் பொடி தூவி சென்று உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் தேவிபிரியா அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் செயலாளர் நேமிராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் தினமும் கோவிலுக்கு வரக்கூடிய நபர்கள் யார், யார் என்ற விவரங்களையும், சந்தேகப்படும்படியாக யாராவது வந்தார்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பஞ்சலோக சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்