பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு
மணல்மேடு அருகே பெண்ணிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு 3 பேருக்கு வலைவீச்சு
மணல்மேடு:
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள பனையக்குடி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது56). இவருடைய மனைவி சிவகங்கை. சம்பவத்தன்று இரவு இருவரும் வீட்டிற்குள் புழுக்கமாக இருந்ததால் வீட்டின் வெளிப்புறம் வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு 2 மணி அளவில் சிவகங்கை கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் 3 பேர் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதனால் அவர் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு எழுந்த பன்னீர்செல்வம், மர்மநபர்களை விரட்டினார். ஆனால் அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள சந்து பகுதியில் புகுந்து தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து பன்னீர்செல்வம் மணல்மேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.