100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7½ மணி நேரம் மின்தடை
கனமழையால் திருவெண்காடு துணை மின்நிலையத்தில் எந்திரங்கள் வெடித்து பழுதடைந்ததால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7½ மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவெண்காடு:
கனமழையால் திருவெண்காடு துணை மின்நிலையத்தில் எந்திரங்கள் வெடித்து பழுதடைந்ததால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7½ மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
துணை மின்நிலையம்
திருவெண்காட்டில் 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் இயங்கி வருகிறது.இதன் மூலம் அண்ணன் பெருமாள் கோவில், நாங்கூர், பூம்புகார், திருவெண்காடு, பெருந்தோட்டம், மங்கை மடம், வானகிரி, தென்னாம்பட்டினம், திருநகரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது.இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நேற்று திருவெண்காடு பகுதியில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
மின்தடை
காலை 11 மணி அளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது இந்த துணை மின் நிலையத்தில் உள்ள எந்திரங்கள் வெடித்து பழுதடைந்தது. இதனால் மேற்கண்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய உயர் அதிகாரிகள் திருவெண்காடு துணை மின் நிலையத்திற்கு விரைந்து சென்து பழுது குறித்து ஆய்வு செய்தனர். இதில் பேட்டரி உள்ளிட்ட சாதனங்கள் பழுதடைந்து இருப்பது தெரிய வந்தது. இதற்கான பிரத்தியோகமாக பழுது நீக்கும் வல்லுனர்கள் திருவாரூரில் இருந்து வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
பொதுமக்கள் அவதி
பழுது நீக்கம் செய்யப்பட்டு மாலை 6.30 மணியில் மின்வினியோகம் வழங்கப்பட்டது.நேற்று காலை 11 மணியில் இருந்து மாலை 6.30 வரை 7½ மணி நேரம் மின் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் திருவெண்காடு துணை மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. மேலும் திருவெண்காடு பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் சிறிது மழை பெய்தால் கூட தடைப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.