மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 7 அணைகள் நிரம்பின-கலெக்டர் சாந்தி தகவல்

Update: 2022-12-15 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 7 அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின என்று கலெக்டர் சாந்தி கூறினார்.

கூடுதல் மழைப்பொழிவு

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் ராமாக்காள் ஏரி அமைந்துள்ளது. அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக 202 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நிரம்பியது. இந்த நிலையில் கலெக்டர் சாந்தி ராமாக்காள் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை காலத்திற்கான இயல்பான மழையளவு 361 மி.மீ. ஆகும். நடப்பாண்டு 576.69 மி.மீ. மழை பெய்துள்ளது. இயல்பான மழையளவை விட 215.69 மி.மீ. கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குட்பட்ட தற்போதைய வட கிழக்கு பருவமழை காலத்திற்கான இயல்பான சராசரி மழையளவு 316.70 மி.மீ. ஆகும். நடப்பாண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 344.96 மி.மீ. மழை பெய்துள்ளது.

7 அணைகள் நிரம்பின

மாவட்டத்தில் ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் 546 ஏரிகளும், பேரூராட்சிகள் கட்டுப்பாட்டில் 14 ஏரிகளும், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை மற்றும் தர்மபுரி வடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டில் 74 ஏரிகள் என மொத்தம் 634 ஏரிகள் உள்ளன. நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த வாணியாறு அணை, நல்லம்பள்ளியை அடுத்த தொப்பையாறு அணை உள்பட 7 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மற்றும் தர்மபுரி வடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டில் 74 ஏரிகளில் 35 ஏரிகள் தனது முழு கொள்ளவை எட்டி உள்ளது. மேலும் 10 ஏரிகளில் 80 சதவீதமும், 14 ஏரிகளில் 50 சதவீதத்திற்கு இணையாகவும் நீர் நிரம்பியுள்ளது.

தடுப்பணை கட்டும் பணி

நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 6 ஏரிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் பாலக்கோட்டில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களால் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிகளுக்கு போதிய அளவில் நீர் கிடைத்திட வழிவகை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார், நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் மாலதி, நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், தாசில்தார் ராஜராஜன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்