வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாணவ, மாணவி உள்பட 68 பேர் அரபு நாடுகளுக்கு சுற்றுலா- கலெக்டர் தகவல்
வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவி உள்பட 68 பேர் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்றனர்.
வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவி உள்பட 68 பேர் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்றனர்.
வினாடி-வினா போட்டி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 2021-2022-ம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக நடைபெற்ற வினாடி-வினா போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 68 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இடையமேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தசமி, பீர்க்கலைக்காடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் வீரமணி ஆகியோரும் கல்வி சுற்றுலாவில் கலந்து கொண்டு, சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்திடும் விதமாக, துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி போன்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 4 நாட்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகள் வாயிலாக 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அழைத்து சென்று வரப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயனுள்ள வகையில்
இக்கல்வி சுற்றுலா குறித்து, தங்களது அனுபவங்கள் மற்றும் பயன்கள் குறித்து மாணவி தசமி கூறியதாவது:- நான் தற்போது 11-ம் வகுப்பு பயின்று வருகிறேன். கடந்தாண்டு மேலச்சாலூர்அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தேன். அச்சமயம் உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. அதில் நானும் மற்றும் மற்றொரு மாணவனும் சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டோம். போட்டிகளில் தேர்வான 35 மாணவா்கள் மற்றும் 33 மாணவிகள் என 68 பேரை ஊக்கப்படுத்திடும் விதமாக, கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றனர். இது என்னை போன்ற மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சுற்றுலாவில் எங்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு சிறப்புமிக்க இடங்களை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பினை எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளனர் என்றார்.
ஆர்வத்தை தூண்டும்
மாணவன் வீரமணிகூறியதாவது:- நான் தற்போது 11-ம் வகுப்பு பயின்று வருகிறேன். கடந்தாண்டு ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தேன். உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவன். எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். என்னை போன்ற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த சுற்றுலா என்பது, இந்த போட்டியில் பங்கு பெற்று அதில் எனது சிறப்பான பங்களிப்பை அளித்தமைக்காக, கல்வி சுற்றுலாவின் வாயிலாக துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி போன்ற இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பினை தமிழக அரசு எங்களுக்கு ஏற்படுத்தி தந்தது. இக்கல்வி சுற்றுலா எங்களுக்கு பயனுள்ளதாகவும், அந்நாடுகளின் பொருளாதாரத்தை அறிகின்ற வகையிலும், சிறப்பாக அமைந்திருந்தது. மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன், கல்வி பயிலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இதுபோன்று, பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.