சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் இன்று நடக்கும் குரூப்-2 தேர்வை 6,370 பேர் எழுதுகிறார்கள்

சேலம் மாவட்டத்தில் 21 மையங்களில் இன்று நடக்கும் குரூப்-2 தேர்வை 6,370 பேர் எழுதுகிறார்கள். முறைகேடுகளை தடுக்க 35 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-24 22:17 GMT

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இன்று (சனிக்கிழமை) குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) நடக்கும் குருப்-2 மற்றும் குருப்-2 ஏ தேர்வினை 6,730 தேர்வர்கள் எழுத உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வாழப்பாடி வட்டங்களுக்கு உட்பட்ட 21 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 34 தேர்வு கூடங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தாள்-1 தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தாள்-2 தேர்வும் நடைபெறவுள்ளது.

குறிப்பாக, தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூடத்திற்கு தாள்-1 தேர்விற்கு காலை 9 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் மேல் தேர்வர்கள் வருகைபுரிந்தால் தேர்வு எழுதும் மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள்.

10 பறக்கும் படைகள்

தேர்வினை கண்காணிப்பதற்காக 10 பறக்கும் படைகளும், 35 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக் கூடங்களை கண்காணித்திடவும், தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிமுறைக்கு ஏற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள்

தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்கள் மற்றும் மாவட்ட கருவூலங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக பிரிவு அலுவலர் முகேஷ், உதவி பிரிவு அலுவலர்கள் குபேந்திரன், தட்சினாமூர்த்தி மற்றும் வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட கருவூலத்துறை, தீயணைப்பு துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கல்லூரி மற்றும் பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்