கோவில் சார்பில் 600 ஜோடிகளுக்கு திருமணம்; அறநிலையத்துறை அரசாணை வெளியீடு

கோவில்கள் சார்பாக நடப்பாண்டு 600 ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி, ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது.

Update: 2023-05-18 18:38 GMT

சென்னை,

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோவில் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைப்பொருட்கள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டு கூடுதலாக 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்தார்.

தங்கத்தாலி, ரூ.50 ஆயிரம் சீர்வரிசை

4 கிராம் தங்கத்தாலி, மணமக்கள் ஆடைகள், திருமணத்திற்கு மணமக்களின் உறவினர்கள் 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, 2 தலையணை, பாய், 2 கைக்கடிகாரம், மிக்சி, பூஜைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வகையறா என ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு இணைக்கமிஷனர் மண்டலத்திலும் 30 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து கோவில்கள் மூலம் மேற்குறிப்பிட்டுள்ள திட்டச் செலவின்படி திருமணங்களை நடத்த தயார் நிலையில் இருக்கவேண்டும். இதற்கான செலவினை முடிந்த வரை உபயதாரர் நிதி மூலம் நடத்தவும், உபயதாரர்கள் கிடைக்காத நிலையில் கோவில் நிதி மூலம் செலவு செய்து திருமணங்களை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று அரசு முதன்மைச் செயலாளராக இருந்த டாக்டர் சந்திரமோகன் மற்றும் அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்