ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

காதல் விவகாரத்தில் முதியவரை வெட்டிய வழக்கில் ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவருக்கு 6 ஆண்டுகள் 2 மாதம் சிறை தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-06-20 18:45 GMT

குளச்சல்:

காதல் விவகாரத்தில் முதியவரை வெட்டிய வழக்கில் ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவருக்கு 6 ஆண்டுகள் 2 மாதம் சிறை தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

காதல் விவகாரம்

குளச்சல் அருகே பாலப்பள்ளம் குடியிருப்புவிளையை சேர்ந்தவர் விஜூமோன் (வயது 37), ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரது மகளை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

திருமணத்துக்கு முன்பு இந்த காதல் தொடர்பாக ஜான்சன் குளச்சல் போலீசில் புகார் செய்து இருந்தார். அதற்கு விஜூமோனின் உறவினர் அருளப்பன் (69) ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருளப்பன் மீது விஜூமோனுக்கு முன்விரோதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 2011 ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி வீடு புகுந்து அருளப்பனை விஜூமோன் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அருளப்பன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து குளச்சல் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கழித்து பாலப்பள்ளத்தில் காரில் சென்று கொண்டிருந்த அருளப்பனை வழிமறித்து விஜூமோன் மீண்டும் கம்பியால் தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் விஜூமோன் மீது போலீசார் மீண்டும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

6 ஆண்டுகள் சிறை

இந்த 2 வழக்குகளும் இரணியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்குகளில் மாஜிஸ்திரேட்டு அமீர்தீன் தீர்ப்பு கூறினார். அதில் முதல் வழக்கில் அருளப்பன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ஒரு மாதமும், அரிவாளால் வெட்டி, காயம் ஏற்படுத்தியதற்காக 3 ஆண்டுகளும், 2-வது வழக்கில் காரை வழிமறித்து நிறுத்தியதற்காக ஒரு மாதமும், கம்பியால் தாக்கியதற்காக 3 ஆண்டுகளும் என மொத்தம் 6 ஆண்டுகள் 2 மாதம் சிறை தண்டனையும், ஒவ்வொரு வழக்குக்கும் தலா ரூ.10 ஆயிரத்து 500 வீதம் ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பை தொடர்ந்து விஜூமோன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஸ்ரீதேவி ஆஜரானார். 

Tags:    

மேலும் செய்திகள்