சாராயம் கடத்திய 6 பேர் கைது; 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

திட்டச்சேரியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இ்தில் தப்பியோடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-11 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இ்தில் தப்பியோடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சாராயம் கடத்தல்

புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்படி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதன்படி திட்டச்சேரியை அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார்சைக்கிள்களை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் சாராய பாக்கெட் மற்றும் சாராய பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

6 பேர் கைது

இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் ராமர்மடம் ஜீவாநகரை சேர்ந்த பாலு மகன் கவி (வயது 28), பனங்காட்டுர் கூத்தமங்களம் பகுதியை சேர்ந்த மோகன் மகன் சுசிந்திரன் (24), பெருங்கடம்பனூர் காலனி தெருவை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன், தேமங்களம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த தங்கையன் மகன் பாலசுப்ரமணியன் (29), சிக்கவளம் நடுத்தெருவை சேர்ந்த கணேசன் மகன் சரத்குமார் (29) மற்றும் அதே தெருவை சேர்ந்த காத்தலிங்கம் மகன் வெள்ளைமுத்துச்செல்வம் (19) ஆகியோர் என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து கீழ்வேளூர் பகுதிக்கு சாராயம் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதில் தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்