சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் 5-ந் தேதி ஈரோடு புத்தக திருவிழா

புத்தக திருவிழா

Update: 2022-07-26 20:51 GMT

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஈரோடு புத்தக திருவிழாவை வருகிற 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

புத்தக திருவிழா

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தக திருவிழா நடத்தப்படவில்லை. ஆனால் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் இணையதளம் மூலமாக ஒளிபரப்பப்பட்டது. இந்த ஆண்டு 18-வது புத்தக திருவிழா ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கி 16-ந் வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா 5-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

அரங்குகள்

இந்த புத்தக திருவிழாவில் நுழைவு கட்டணம் கிடையாது. 230-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது. சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் விசாலமான வாகனங்கள் நிறுத்தமிடம் வசதி உள்ளது. 6-ந் தேதி முதல் தினமும் மாலை 6 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந் தேதி பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கேற்கிறார். 8-ந் தேதி ஜி.டி.நாயுடு விருது வழங்கப்படுகிறது. 40 வயதுக்கு உள்பட்ட இளம் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு பல்வேறு தகுதிகள் ஆராயப்பட்டு விருதுகள் வழங்கப்படும். 5 அறிவியல் வல்லுனர் கொண்ட குழுவினர் தகுதி வாய்ந்த இளம் அறிவியல் ஆராய்ச்சியாளரை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த விருதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் தலைவர் கே.சிவன் கலந்துகொண்டு வழங்குகிறார். 9-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 10 வெளிநாடுகளை சேர்ந்த தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ந் தேதி எடிட்டர் வி.லெனின், நடிகை சுகாஷினி ஆகியோர் பங்கேற்கிறார்கள். 11-ந் தேதி சுகிசிவம் பேசுகிறார். 12-ந் தேதி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சங்கத்தமிழ் பாடல்களை நவீன காலத்துக்கு ஏற்ற இசையில் தனது படைப்புகளை வழங்குகிறார். 13-ந் தேதி தமிழருவி மணியன் பேசுகிறார். 14-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசுகிறார். 15-ந் தேதி வேலுநாச்சியார் நாடகம் நடத்தப்படுகிறது.

தள்ளுபடி

இந்த ஆண்டின் சிறப்பு முழக்கமாக "இல்லந்தோறும் நூலகம்" பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 70 அரங்குகள் ஆங்கில புத்தகங்கள் கொண்டதாக அமைய உள்ளது. பொதுமக்களுக்கு 10 சதவீதமும், பள்ளி, கல்லூரிகளுக்கு 10 முதல் 35 சதவீதம் வரை புத்தகங்களுக்கு விலையில் தள்ளுபடி வழங்க பதிப்பாளர்கள் முன்வந்து உள்ளனர். ரூ.250-க்கும் மேற்பட்ட விலையில் புத்தகங்கள் வாங்கும் மாணவர்களுக்கு புத்தக ஆர்வலர்கள் சான்று வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது மக்கள் சிந்தனை பேரவை மாநில செயலாளர் அன்பரசு, துணைத்தலைவர் விஜயராமலிங்கம், பொருளாளர் அழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்