கஞ்சா விற்பனை செய்தவர்களின் 59 வங்கி கணக்குகள் முடக்கம்

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் 59 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

Update: 2022-05-30 21:49 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் 59 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

132 கஞ்சா வழக்குகள்

குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதன்படி குமரி மாவட்டத்தில் 132 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்தவர்களின் 91 வங்கி கணக்குகள் முடக்க பரிந்துரை செய்யப்பட்டு 59 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் உறவினர்கள் வங்கி கணக்குகள் கஞ்சா விற்பனைக்கு பயன்பட்டு இருந்தால் அந்த கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இளைஞர்கள் அவர்களது பெற்றோரின் வங்கி கணக்கை பயன்படுத்தி கஞ்சா வாங்கவோ, விற்கவோ பயன்படுத்துவது பற்றி தெரிய வந்தால் அந்த வங்கி கணக்கினையும் முடக்க வங்கிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பாக பரிந்துரை செய்யப்படும்.

13 செல்போன்கள் பறிமுதல்

மேலும் கஞ்சா விற்பனை செய்து இருச்சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி இருந்தாலோ அதனை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கஞ்சா குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் 7010363173 என்ற எண் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான தகவல்கள் இந்த எண்ணில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உண்மை தன்மை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2 மாதத்தில் கஞ்சா விற்பனையில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள். மேலும் சமீபத்தில் செல்போன்கள் பறித்துச் சென்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குட்கா விற்பனை குறைவு

குமரி மாவட்டத்தில் நடந்த வீடு புகுந்து திருடிய வழக்குகளில் தொடர்புடையவர்களை தனிப்படை மூலம் கண்காணித்து வருகிறோம். விரைவில் அவர்களும் கண்டுபிடிக்கப்படுவார்கள். கடந்த சில மாதங்களாக குட்கா விற்பனை பெருமளவு குறைந்துள்ளது. மேலும் கஞ்சா மற்றும் குட்கா இல்லாத மாவட்டமாக குமரியை மாற்ற இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், வேல்முருகன், பயிற்சி துணை சூப்பிரண்டுகள் யோகேஷ், செங்குட்டுவன், சிந்து, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்