தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள்

Update: 2022-12-15 18:45 GMT

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது என்று மின்சார வாரிய ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கூறினார்.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு நாகை-திருவாரூர் வட்ட ஒருங்கிணைப்பு செயற்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் வட்ட கிளை தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நாகை வட்ட கிளை தலைவர் செல்வராஜு முன்னிலை வகித்தார்.

இதில் மாநில தலைவர் மணிகண்டன், பொருளாளர் லூர்து பாஸ்டின்ராஜ், திட்ட செயலாளர்கள் முருகஅருள், சாரதி, செயல் தலைவர் ராஜகோபால், பொருளாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

56 ஆயிரம் காலி பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. மின்சார வினியோகம், உற்பத்தி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலி பணியிடங்கள் உள்ளதால் பணிகள் சரிவர மேற்கொள்ள முடியாத நிலை நிலவி வருகிறது. இதனால் மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பு இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி மூலம் தர வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. அவுட்சோர்சிங் முறையில் காலி பணியிடங்களை நிரப்பிட அரசு திட்டமிட்டுள்ளது. 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

வேலைநிறுத்த போராட்டம்

எனவே ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் அனைத்து ஊழியர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்