போலி பில் தயாரித்து ரூ.56¾ லட்சம் ேமாசடி; 2 ஊழியர்கள் கைது

நெல்லையில் தனியார் நிறுவனத்தில் போலி பில் தயாரித்து ரூ.56¾ லட்சம் மோசடி செய்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-25 20:07 GMT

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தனியார் நிறுவனம்

நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் கலீல்ரகுமான் (வயது 31). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மெட்டல் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்த நிறுவனத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (31) விற்பனை பிரதிநிதியாகவும், மணிகண்டன் (29) கம்ப்யூட்டர் பில் போடுகிறவராகவும் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் 2 பேரும் சேர்ந்து நிறுவனத்தில் மெட்டல் விற்பனையான பணத்திற்கு போலியாக பில் தயாரித்து முத்துக்குமார் ரூ.53 லட்சமும், மணிகண்டன் ரூ.3 லட்சத்து 70 ஆயிரமும் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2 பேர் கைது

இதுகுறித்து கலீல்ரகுமான் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆணையாளர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மகாராஜன் (54), கந்தன் ஆகியோர் சேர்ந்து கூட்டுறவு வீட்டு வசதி வாரியத்திற்குரிய நரசிங்கநல்லூரில் உள்ள நிலத்திற்கு பிளான் அப்ரூவர் வாங்குவதற்காக தாசில்தார் வழங்குவது போல் போலியாக ஆவணத்தை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை தாசில்தார் வைகுண்டம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தார். கந்தனை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்