அரியலூரில் காலாவதியான 55 கிலோ இறைச்சி பறிமுதல்

அரியலூரில் காலாவதியான 55 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒரு ஓட்டலுக்கு `சீல்' வைத்தனர்.

Update: 2023-09-19 18:50 GMT

55 கிலோ இறைச்சி

அரியலூர் நகரில் உள்ள 15 ஓட்டல்களில் நேற்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, காடை இறைச்சி என சுமார் 55 கிலோ அளவிலான காலாவதியான இறைச்சிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இறைச்சி பாக்கெட்டுகளை திறந்தால் அதனை உடனே பயன்படுத்த வேண்டும் எனவும், இறைச்சிகளை அதற்குரிய வெப்பநிலையில் சரிவர பராமரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நோட்டீஸ்

மேலும் சைவ மற்றும் அசைவ பொருட்களை தனித்தனி குளிர்சாதன பெட்டிகளில் வைத்து அவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும், சமையல் அறைகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் கடை ஊழியர்களுக்கும் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து காலாவதியான இறைச்சிகளை வைத்திருந்ததாக அரியலூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு `சீல்' வைக்கப்பட்டது. மேலும் பிற குறைபாடுகள் கண்டறியப்பட்ட ஓட்டல் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்து சென்றனர். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக 2 கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்