கோவையில் 54 ரவுடிகள் கைது

கோவையில் 54 ரவுடிகள் கைது

Update: 2023-02-25 18:45 GMT

கோவை

கோவையில் 2 கொலை சம்பவங்களை தொடர்ந்து, 54 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

2 கொலைகள்

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சத்தியபாண்டி. இவர் மீது மதுரை, கோவையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி 5 பேர் கொண்ட கும்பலால் சத்தியபாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவில்பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவர் கோவை கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு திரும்பிய போது, பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த 2 படுகொலை சம்பவங்களும் கோவை மக்களை அச்சமடைய செய்தது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் 2 கொலைகளில் தொடர்புடைய 13-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

ரவுடிகள் கைது

இந்த 2 சம்பவங்களை தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளை ஒழிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக ரவுடிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகர போலீசார் கூறும்போது, கோவையை ரவுடிகள் இல்லாத மாநகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 540 ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அடிதடி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 54 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் ரவுடிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்