தமிழக போலீசுக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் தேர்வு -டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
தமிழக போலீசுக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும், ராமஜெயம் கொலை வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.;
திருச்சி,
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போட்டிகளை தொடங்கிவைத்து பேசியதாவது:-
கடந்த ஆண்டு 10 ஆயிரம் போலீசார் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 3,200 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆயிரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு 444 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி தொடங்கியுள்ளது. இன்னும் 500 சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் 10 சதவீதம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஜி.பி. பரிசு வழங்கினார். இந்த போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது
ராமஜெயம் கொலை வழக்கு
முன்னதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் மிக அமைதியாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு மிக சரியாக செயல்படுகிறது. சாதி, மத மோதல்கள் இல்லாமலும், சாராயம், கொலை, கொள்ளை போன்றவற்றில் இறப்புகள் எதுவும் இல்லாமலும் தமிழ்நாடு அமைதியாக இருப்பதற்கு காரணம் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய 1 லட்சத்து 34 ஆயிரம் காவல் துறையை சேர்ந்தவர்களால் தான். அதிலும் ஒரு லட்சம் போலீசார் தமிழக முழுவதும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருவதால் இந்த பாதுகாப்பை உறுதி செய்ய முடிகிறது.
தொழில் அதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சரியான பாதையில் செல்வதால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவதற்கான வாய்ப்பில்லை. பல லட்சம் மக்களை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற நிதி நிறுவன உரிமையாளர்களை இன்டர்போல் மூலம் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தொழிற்சாலை குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே தேவையின் அடிப்படையில் புதிய போலீஸ் நிலையங்கள் திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.