சங்கரன்கோவிலில் கத்தை, கத்தையாக 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கியது; 2 பேர் கைது

சங்கரன்கோவிலில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தை, கத்தையாக கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-08-19 16:48 GMT

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தற்காலிக பஸ் நிலையம் அருகில் நேற்று முன்தினம் மாலை சங்கரன்கோவில் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.

இதில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை, கத்தையாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சென்னையை சேர்ந்த நாகராஜன் (வயது 39), சங்கரன்கோவிலை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசித்து வருபவருமான காஜா நஸ்முதீன் (39) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் கள்ள நோட்டுகளை சங்கரன்கோவிலில் புழக்கத்தில் விட முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்துக்கு கள்ள நோட்டுகளும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

காஜா நஸ்முதின் ஏற்கனவே சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த கள்ளநோட்டு விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்